வளர்ந்து வரும் இளைய தலைமுறையின் அறிவாற்றலும் செயல் திறனும் அதிகரித்து வருவது போலவே தற்போதைய ஐந்தாம் தலைமுறை தொலைத் தொடர்பு தொழில்நுட்பம், கணினி, அதனால் இயக்கப்படும் இயந்திர மனிதன், சூட்டிகைப் பேசி போன்றவைகளின் பணிகள் மற்றும் பயன்கள் மேலாதிக்கம் பெற்று வருகின்றன. நாம் பேசும் மொழியை புரிந்து கொண்டு அக்கட்டளையை செயல்படுத்தக் கூடிய கைபேசி வசதிகள், வழிகாட்டும் வரைபடங்கள், கணினி கட்டுப்பாட்டால் இயக்கக் கூடிய ஓட்டுநரில்லா வாகனங்கள் மற்றும் பல தானியங்கி கருவிகள் போன்றவைகள் எல்லாம் கணினி மென்பொருள் செயல்பாடுகளினால் கிடைக்கப் பெற்றவை. எதிர்காலத்தில் மனிதனின் பணிகளை எளிமைப்படுத்தி சிறப்பாகச் செய்யக்கூடிய மாதிரி இயந்திர வடிவங்களின் ஆட்சியில் உலகம் சுழலும் என்றால் அது மிகையாகாது.
கணினித் துறையில், வருங்காலத்தில் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் அதிகமான வேலை வாய்ப்புகளை அளிக்கக் கூடிய துறையாக செயற்கை நுண்ணறிவு Artificial Intelligence (AI) துறை விளங்கும். இதன் மூலம் மனிதனைப் போன்று அல்லது மனிதர்களை விட சிந்திக்கும் மற்றும் செயல்படக் கூடிய அறிவுத் திறன் கொண்ட கணினிப் பொறிகளை உருவாக்குவதே இத்துறையின் நோக்கமாகும். இத்துறை, மனிதனின் பகுத்தறியும் திறனடிப்படையில், கற்றல், பகுத்தாய்தல், திட்டமிடல், உணர்தல், உள்ளுணர்தல், பார்த்தல், கேட்டல் ஆகிய பண்புகளைக் கொண்டு சூழ்நிலைக்கேற்ப முடிவுகள் மேற்கொண்டு செயல்படுத்தக் கூடிய ஒரு பணியினை கணினியினைக் கொண்டு செய்து முடிக்க இயந்திரங்களை உ௫வாக்குவதாகும். எனவே, இத்துறை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவதில் ஆச்சரியமில்லை. இத்துறை வளர்ச்சியடைந்து முழு வெற்றி பெற்று விட்டால் மனிதன் சென்று வேலை செய்ய முடியாத இடங்களிலெல்லாம் கூட இயந்திர வடிவங்களைக் கொண்டு அவ்வேலைகளை செய்து முடிக்கலாம். அவ்விடங்கள் விண்வெளியாகவோ அல்லது காற்று மாசடைந்த இடமாகவோ இருக்கலாம். Windows 10 வருகைக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு வாயிலாக சூட்டிகைப் பேசிகளின் செயலிகளில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது எனலாம். Cortana, Hound, ELSA (English Language Speech Assistant), Siftr Magic Cleaner, Robin etc. போன்ற செயலிகள் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே. உன்னதமான வேலைவாய்ப்பை உலகமெங்கும் அள்ளித் தரக் கூடியதும் 2030 ஆம் ஆண்டில் அதிகமான நபர்கள் பணி செய்யக் கூடிய துறையாகவும் செயற்கை நுண்ணறிவு Artificial Intelligence (AI) துறை விளங்கும். மேலும், இத்துறையில் இந்தியா மிகப் பெரிய திறனறிவு பெற்றவர்களை உடையதாகவும் இருக்கும் என்று பொருளாதார கணக்கீட்டு அறிக்கை தெரிவிக்கிறது. அத்தகைய துறையினைப் பற்றிய விளக்கத்தை இச்சிற்றேட்டில் காணலாம்.